திட்டங்களுக்கான நிதி குறைப்பால், மாநில அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்

கொரோனா பெருந்தொற்றில் இருந்து படிப்படியாக நாடு மீண்டு வரும் நிலையில், அடுத்தாண்டுக்கான பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த பட்ஜெட் பல்வேறு முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் மாநில நிதி மந்திரிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், மாநிலங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் 2023 – 2024ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்க வேண்டும். தமிழகத்துக்கான ஜி்.எஸ்.டி., இழப்பீட்டுத் தொகையான ரூ.11,185.82 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

மத்திய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளதால், மாநில அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடைவெளியை களைய வேண்டும். இரு அரசுகளும் தலா 49 சதவீதம் பங்களிப்பை அளிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணியை இரு தரப்பும் 50-50 என்ற பஙகளிப்பின் அடிப்படையிலான ஒப்புதல் அளித்து, உரிய நிதியை வரும் 2023-2024 பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும். தமிழகத்துக்கு உரிய ரெயில்வே திட்டங்களை வழங்க வேண்டும். இவ்வாறு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − 8 =