
தாலிக்குத் தங்கம் திட்டத்தில் பயன்பெற தகுதியானோரின் ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது.
அதேப்போன்று மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதிஉதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தாலிக்குத் தங்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, மிகவும் பின்தங்கிய ஏழ்மை நிலையில் உள்ள தகுதியானோருக்கு மட்டுமே திருமண நிதியுதவி வழங்கப்படும். திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக் கூடாது. வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்று இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாடி வீடு, நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு இருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.