தான் பயின்ற மாநகராட்சிப் பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி வழங்கிய சாலமன் பாப்பையா

மதுரையில் தான் படித்த மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா ரூ.20 லட்சம் நிதி வழங்கினார்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் போன்ற கட்டமைப்புகள் தன்னார்வர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உதவியுடன் மேம்படுத்தப்படுகிறது. அந்த வகையில், மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கு நமக்கு நாமே திட்டத்தில் ரூ.20 லட்சம் காசோலையை இன்று மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கல்வி அலுவலர் நாகேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து சாலமன் பாப்பையா கூறுகையில், ‘‘தற்போது வெள்ளி வீதியார் மாநகராட்சிப் பள்ளி பெண்கள் மேல்நிலைப் பள்ளியாக உள்ளது. நான் படித்தபோது இரு பாலர் நகராட்சி நடுநிலைப் பள்ளியாக இருந்தது. நான்காவது வகுப்பு வரை அந்தப் பள்ளியில்தான் படித்தேன்.

அந்தப் பள்ளியும், அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் கற்றுக்கொடுத்த கல்விதான் இன்று அடைந்த உயரத்திற்கு காரணம். அந்த நன்றியை தெரிவிக்கவே நான் படித்த அந்த பள்ளிக்கு ஒரு சிறு உதவி செய்துள்ளேன். மேலும், நம்மை போல் பலரும் இதுபோல் தாங்கள் படித்த அரசு பள்ளிகளை மேம்படுத்த ஆதரவு கரம் நீட்ட வேண்டும்” என்றார்.