ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
ஆப்கனில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்தது. தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தியதுடன் பல முக்கிய நகரங்களை அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபூலை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலையும் கைப்பற்றிய தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் ஆட்சியதிகாரத்தையும் தன்வசப்படுத்தினர். ஆப்கன் அதிபர் மாளிகை உள்பட அனைத்து பகுதிகளையும் கைப்பற்றிய தலிபான்கள் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவித்தன.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையிலான அரசுடன் நட்புரீதியிலான உறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. முன்னதாக, தலிபான் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஆதரித்த நிலையில், தற்போது சீனாவும் ஆதரவளித்துள்ளது. மேலும், தலிபான்களின் நடவடிக்கைகளை பொறுத்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.