
தருமபுரியில் விவசாய வீட்டிற்குள் புகுந்து ரூ.27.50 லட்சம் பணம், நகையை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள அச்சல்வாடியைச் சேர்ந்தவர் குமரேசன் (46). விவசாயியான இவர், தனது உறவினர்களின் நிலத்தை விற்ற 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தனது மாடுகளை விற்ற பணம் ரூ.2.50 லட்சம் என மொத்தம் 27.50 லட்சத்தை தனது வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதே ஊரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு குமரேசனும், அவரது மனைவியும் சென்றுள்ளனர். சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து வீட்டிற்குள் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ. 27.50 லட்சம் ரொக்கம், 9 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. திருடிய மர்ம நபர்கள் கைரேகை பதிய கூடாது என்பதற்காக ஆங்காங்கே மிளகாய் பொடிகளை தூவிச் சென்றுள்ளனர். இது குறித்து குமரேசன் அரூர் போலீசார் புகார் அளித்தார். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.