தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு மக்களிடம் ஆளுநர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்: சீமான்

“ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திராவிடம், திராவிடன், திராவிட நாடு, திராவிட ஆட்சி, திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளில் நாம் தமிழர் கட்சிக்குத் துளியளவும் உடன்பாடு இல்லையென்றாலும், திராவிடக் கொள்கையோடு, தமிழ்த் தேசியத்திற்கு எத்தனை முரண்கள் இருந்தாலும், எட்டுகோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பரிந்துரைத்த வார்த்தைகளை, ஆளுநர் தனது உரையில் படிக்க மறுத்ததை ஒருபோதும் ஏற்க முடியாது.

இது முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட கொடுந்தாக்குதலாகும். மேலும், தமிழ்நாட்டின் முதல்வர் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும் அவமதித்துள்ளார். தமிழ்நாட்டு ஆளுநரின் இத்தகைய தரம் தாழ்ந்தப்போக்கினை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், தமிழ் மண்ணிற்கும், மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நியமனப் பொறுப்பாளரான ஆளுநர் தமது மலிவான நடவடிக்கையால் தமிழ்நாடு அரசினையும், மக்களாட்சி முறைமையினையும் மட்டும் அவமதிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் அவமதித்துள்ளார். உடனடியாக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசிடமும், தமிழ்நாட்டு மக்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 + = 43