தமிழரின் திருநாள் தைப் பொங்கல் பெருநாள்

பொங்கலோ…….
பொங்கல் இது
இன்பம்
பொங்குகின்ற
பொங்கல் இது!

ஊருக்கு சோறூட்டும்
உழவரது பெருமைகளை
பாருக்கு சொல்லுகின்ற
தமிழர் பண்பாட்டு
பொங்கல் இது!

பச்சை மண்ணை
பிசைந்து செய்து
பக்குவமாய் சுட்ட பானை
பழந்தமிழர் வரலாற்றை
கீழடியின் ஆய்வில் சொல்லும்!

வாசலிலே…..
வண்ணக் கோலமிட்டு
வான்பார்த்து பானைவைத்து
மெல்ல அடுப்பேற்றி
மேனிகாயும் பானைசூட்டில்
பசும்பாலை சிறுக ஊற்றி
பொங்கிவரும் நேரம்பார்ப்பார்
பொங்கலோ பொங்கலென
பொங்கும் மனம்
மகிழ்ந்து நிற்பார்!

சீரகச்சம்பா பச்சரிசி
சிந்தாமல் உலையிலிட்டு
செவந்தநிற அச்சுவெல்லம்
அளவோடு அதில் சேர்த்து
முற்றிக்காய்ந்த திராட்சையுடன்
முந்திரியும் ஏலக்காயும்
ஒன்று சேர்ந்து நெய்யொழுக…,
புதியதொரு வாசனையில்
புதுப்பொங்கல் குழைந்துவர
செந்தமிழின் தேன்சுவையில்
செங்கரும்பு
பொங்கல் செய்வார்!

மஞ்சளிலே தாலிகட்டி
மணவரையில் ஏற்றி வைப்பார்
தலவாழை இலைவிரித்து
தலைமுறைகள்
வாழ வேண்டி
சுற்றமும் நட்பும் சூழ
சூரியப்படையல் செய்வார்!

சாறுண்ணியாய்
உடன் வாழ்ந்து
சலிப்பில்லாமல் உழைப்பைத் தந்து
கட்டுத்தரை காளைகளாய்
சுற்றி வரும்
நம்மவீட்டு நாட்டுக்காளை
தமிழ்
மண்ணில் பிறந்த மயிலைக் காளை!

அது….
வாலைத் தூக்கிக்கொண்டு
வாடிவாசல் தாவிவர
ஓடிவரும் காளைகளை
நீதிமன்ற வழக்கு ஒன்று
நிற்கச்சொல்லி ஆணையிட
நீதிகேட்டுப் போராட
வீதிவந்தது தமிழர் கூட்டம்!

சாதிமதம் பேதமில்லை
சமத்துவம் சொல்லும்
தமிழினமாய் ஒன்றுகூடி
ஆண்கள் நிகர்
பெண்களென
அலைகடல் போல் தன்னெழுந்து
களத்தில் நின்று கைகோர்த்து
மெரினா…
கடற்கரையில் வென்றெடுத்தோம்
நம் பாரம்பரிய
ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தோம்!!

மனிதநேயம்
வாழும் மண்ணில்
மக்கள் கொண்டாடும்
மாபெரும் பெருநாள் இது!
மார்கழிப் பனிமழையில்
பூத்து வரும்
தை முதலில்
வள்ளுவராண்டில் வரும்
தமிழரின்
தைப்பொங்கல்
திருநாள் இது!!

பொங்கலோ….
பொங்கல் இது!
இன்பம்
பொங்குகின்ற
பொங்கல் இது!!

சுபபாரதி மறைமலைநகர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 − 77 =