தமிழக முதல்வருக்கு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி கோரிக்கை

திமுக தேர்தல் வாக்குறுதிபடி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகுதிநேர ஆசிரியர்களை மனிதாபிமானத்துடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்  என புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழக அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக கணினி, ஓவியம், உடற்கல்வி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகிய பாடங்களில் பணியாற்றும் அனைவரையும்,  தமிழக முதல்வர் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் குறிப்பிட்டபடி பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

விலைவாசி ராக்கெட் போல் ஏறிவிட்ட இந்த காலத்தில், ரூபாய் 10ஆயிரம் சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கின்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம், ஊதிய உயர்வு, இறந்தவர் குடும்பத்திற்கு நிதி போன்றவற்றை உடனடியாக வழங்க ஆணையிட வேண்டும். மனிதாபிமானத்துடன்  12ஆண்டுக்கும் மேல் பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் மீது  கருணை கொண்டு காலமுறை சம்பளம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.