தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கிய நிலையில், முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறையில் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
அதன்படி, தமிழக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்களாக, பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பெட்ரோல் மீதான வரி குறைப்பால் ஆண்டுக்கு ரூ.1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து துறை ரீதியாக பார்க்கும்போது, அதிகபட்சமாக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599 கோடியும், குறைந்தபட்சமாக தொல்லியல் துறைக்கு ரூ.29 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.80 கோடியும், காவல் துறைக்கு ரூ.8,930 கோடியும், தீயணைப்புத் துறைக்கு ரூ.405 கோடியும், நீதித் துறைக்கு ரூ.1,713 கோடியும்,
மீன்வளத் துறைக்கு ரூ.303 கோடியும், குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899 கோடியும், மின்சாரத்துறைக்கு ரூ.19,872 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடியும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.18,933 கோடியும், சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடியும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக ரூ.4,142 கோடியும், பருவநிலை மாற்ற மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்துவதற்காக ரூ.500 கோடியும் என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து அனைத்து தொழில்நுட்ப துறைகளிலும் நடைமுறைகள் கணினி மயமாக்கப்படும். அனைத்து பொதுசேவை துறைகளிலும் மின்னனு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். பொது நிலங்கள் குறித்த சிறப்பான மேலாண்மைக்கு அரசு நில மேலாண்மை அமைப்பு உருவாக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி, கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும், மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.2,60,409.26 கோடி எனவும், ஒட்டுமொத்த வருவாய் செலவினம் ரூ.2,61,188.57 கோடி எனவும், வருவாய் பற்றாக்குறை ரூ.58,692.58 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டசபையில் பேச வாய்ப்பு கேட்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிக்கிடையே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதால், அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு பேச வாய்ப்பு தரவில்லை எனக்கூறி பட்ஜெட் உரையை புறக்கணித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளி நடப்பு செய்தனர்.
இந்நிலையில் நாளை (ஆக.14) தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2020-21ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்துள்ள பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வரி குறைப்பு விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என நிதித்துறை செயலர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.