
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எத்தனை வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன விவரங்கள் பின்வருமாறு:
1977 – 2001ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 9 வெள்ளை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1977ம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது இதன் தொடர்பாக அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை மீது 4 நாட்கள் விவாதமும் நடைபெற்றது.
1981ம் ஆண்டு உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் விலையேற்றம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது.
1983ல் தமிழ்நாட்டில் நிலவிய வறட்சி நிலைமை குறித்தும் 1984ம் ஆண்டு வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் குறித்தும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பின் 1994ம் ஆண்டு பெய்த மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து அதன் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெற்றது.
1996ம் ஆண்டு ஏற்பட்ட புயல் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக அப்போதைய முதல்வர் கலைஞர் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.
1998ம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு தொடர்பாகவும், 2000ம் ஆண்டில் எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி. பிரிவினருக்கு அரசு பணிகளில் வழங்கிய இட ஒதுக்கீடு தொடர்பாகவும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இறுதியாக சட்டப்பேரவையில் 2001ம் ஆண்டு தமிழ்நாட்டின் நிதிநிலை தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த வெள்ளை அறிக்கை தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை.