தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.13 முதல் செப்.21ம் தேதி வரை நடைபெறும் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.13 முதல் செப்.21ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் கோட்டையில் உள்ள சபாநாயகர் அப்பாவு அறையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ஜனதா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதிமுக சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் ஆக.13ம் தேதி பொது பட்ஜெட்டும், ஆகஸ்ட் 14ம் தேதி தமிழக வரலாற்றில் முதல்முறையாக வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு பட்ஜெட்டும் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் முறையில் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு உறுப்பினர் மேஜை முன்பும் தனியாகக் கணினி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.13ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்குகிறது. அன்றைய தினம் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்த பட்ஜெட் காகிதம் இல்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் ஒவ்வொரு எம்எல்ஏக்களின் இருக்கை முன்பு வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் திரைகளில் தெரியும். இது தவிர எம்எல்ஏக்களுக்கு கையடக்க கணினி (டேப்) வழங்கப்படும். அதை புத்தகத்தை புரட்டுவது போல் பட்ஜெட் அறிக்கை பக்கங்களை பார்த்துக் கொள்ளலாம்.

மறுநாள் (14ம் தேதி) வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

இந்த இரண்டு பட்ஜெட்கள் மீதும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும். அதன் பிறகு 2 அமைச்சர்களும் பதில் அளித்து பேசுவர். 23ம் தேதி முதல் மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்வர். 23 நாட்கள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பர். அதனடிப்படையில் மொத்தம் 29 நாட்கள் சட்டசபை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.