
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்.13ம் தேதியுடன் நிறைவடைவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆக.13 முதல் செப்.21 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஆக.13, 14ம் தேதிகளில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டும், அதனைத்தொடர்ந்து இந்த இரண்டு பட்ஜெட்கள் மீதும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெறும் எனவும், பின்னர் 23ம் தேதி முதல் மானிய கோரிக்கைகளை அந்தந்த துறை அமைச்சர்கள் தாக்கல் செய்து, 23 நாட்கள் நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, வேட்பு மனு தாக்கல் ஆக.24ல் தொடங்கி, ஆக.31ல் முடிவடையும் எனவும், வேட்பு மனு மீதான பரிசீலனை செப்.1ம் தேதியும், வேட்பு மனு திரும்பப் பெற செப்.3ம் தேதி கடைசி நாள் எனவும், பின்னர் செப்.13ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவும் அதனைத்தொடர்ந்து அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் செம்.13ம் தேதியுடன் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்து விட முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளது.