தமிழக அரசு காவேரி குண்டாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்தி, அதற்கான நிதியை ஒதுக்கி விரைந்து முடித்திட வேண்டும். வறட்சியான மாவட்டங்களாகிய புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தினை நம்பி உள்ளனர். காவேரி, குண்டாறு திட்டத்தில் தற்போது 6500 கன அடி நீர் வரத்திற்கான வாய்க்காலை 10 ஆயிரம் கன அடியாக மாற்றி செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு செயல்படுத்தினால் தான் கடைமடை வரை நீர் செல்லும். இந்த ஆண்டு 180 டி.எம்.சி தண்ணீர் காவேரியிலிருந்து வீணாக கடலில் சென்று கலந்து விட்டது. இந்த நீரினை வீணாகவிடாமல் தடுப்பணை கட்டி விவாசயிகள் பயன்பெறும் வகையில் செய்திட வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ரூ.40 முதல் 60 வரை வாங்குகின்றனர். தமிழக அரசு நிரந்தரமாக அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் எவ்வளவு என்று விளம்பர பததைகள் வைக்க வேண்டும். விவசாயிகள் தாங்கள் அறுவடை இயந்திர கூலி மற்றும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும் டிப்பர் கூலி என அனைத்தும் கடனே வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் விவாயிகளிடம் வசூல் செய்யும் தொகையை ரத்து செய்ய வேண்டும். அல்லது அவர்களது கணக்கில் பிடித்தம் செய்து கொண்டு மீதம் தொகை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் உள்ள உர மொத்த விற்பனையாளர்கள் சில்லரை விற்பனையாளர்களிடம் ஒரு டன் யூரியா வாங்கும் போது அவர்களை சத்துக்குருணை ஒரு டன்னுக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு வற்புறுத்துவதால் சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளிடம் ஒரு மூட்டை யூரிய ரூ.265க்கு வாங்கும்போது ரூ.400-க்கு நுண்ணூட்ட சத்து என்ற குருணையை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையற்ற செலவினமாகிறது.
ஆகிய கோரிக்கைகளை விரைந்து செயல்படுத்த தமிழக அரசுக்கு த.மா.க. விவசாய அணி மாநில தலைவர் துவார் ரெங்கராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.