தமிழக அரசின் நிதிநிலை குறித்த 120 பக்க வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரும் 9ம் தேதி வெளிடுகிறார்

தமிழக அரசின் நிதிநிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து 120 பக்க வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வரும் 9ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில் 2021-22ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் தொழில் துறை தொடர்பான முக்கிய திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மேலும் கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் தொழில் கல்வி பயில்வதற்கு தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கண்டறிந்து உரிய பரிந்துரைகளை செய்துவிடவும் ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.

அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனைத்டொடர்ந்து சட்டசபையில் வரும் 13ம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், வேளாண் துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார்.

இந்நிலையில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மேலும் நிதி நிலை அறிக்கை தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை மேற்கொண்டு வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் நிதிநிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து 120 பக்க வெள்ளையறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரும் 9ம் தேதி வெளியிடுகிறார். இதில், கடன் விபரங்கள், சென்னை மெட்ரோ வாட்டர் வரவு, செலவு விவரங்கள் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.