
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயக்கோட்டை பேருந்து நிற்கும் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த தஸ்தகீர்(42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு லாட்டரி சீட்டுகளை அச்சடித்து விற்பனை செய்வது தெரிந்தது.
இதனைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் பேரில் பாலக்கோட்டை சேர்ந்த தேவன்(40), பூபால்(26), கிருஷ்ணகிரியை சேர்ந்த நியாமத்துல்லா(62), தேன்கனிக்கோட்டையை சேர்ந்த இப்ராஹிம் கலீல்(32), ஓசூரை சேர்ந்த முருகேசன்(44) ஆகிய 6 பேரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 ஆயிரம் பணம், 10 மொபைல் போன்கள், 6 லட்சம் மதிப்பிலான லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, தேன்கனிகோட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் கிருத்திகா ஆகியோர் அவர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதனைத்தொடர்ந்து ராயக்கோட்டை காவல் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.