தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் புதிய கட்டுப்பாடுகள் அமல்

இன்று முதல் மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் சோதனை சாவடிகளில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாளையாறு சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேபோல கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக கணிசமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது. இதன் காரணமாக கடந்த 2ஆம் தேதியில் இருந்து கோவை – கேரள எல்லையில் உள்ள 13 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் இருந்து கோவை வருவோர் கட்டாயமாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 தவணைகள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாநிலம் முழுவதும் மாநில எல்லைகளில் உள்ளே வரும் நபர் கட்டாயமாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் மீண்டும் அந்தந்த மாநிலங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். வாளையாறு எல்லையில் இன்று காலை முதல் கேரளாவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்படுகிறது. இங்கு வரக்கூடியவர்கள் இ-பதிவு மற்றும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் உள்ளே அனுமதித்து வருகின்றனர். சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இன்று காலை முதல் இதுவரை 27க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

நடைபயணமாக வருபவர்கள் கூட இங்கு சோதனை செய்து அவர்களிடம் உரிய சான்றிதழ் உள்ளதா என்று சரிபார்க்கின்றனர். சான்றிதழ் இல்லாமல் வருபவர்கள் அவசியமாக கோவை செல்ல வேண்டும் என்றால் மட்டும் இங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வருவதற்கு 24 மணி நேரம் ஆகும் என்பதால் பரிசோதனை செய்து கொள்வோர் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை சுகாதாரத்துறையினர் பதிவு செய்து வருகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் வெளியே வருவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக எல்லைகளில் கண்காணிப்பானது இன்று காலை முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.