தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாடு, புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்யும். தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். குமரி, தென்காசி, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 14-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 15-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 16, 17-ல் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரின் ஒருசில பகுதிகளில் மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சோலையாறு, சின்னகோனாவில் தலா 10 செ.மீ., சின்னக்கல்லார் -9 செ.மீ., வால்பாறை – 7 செ.மீ., நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 6 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார், அவலாஞ்சியில் தலா 5 செ.மீ., பந்தலூரில் 4 செ.மீ., மழை பொழிந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். செப்.17 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். பலத்த காற்று வீச வாய்ப்புள்ள கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.