தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை : உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதில்

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் பதிலளித்துள்ளார்.

கொங்கு மண்டலத்தை பிரித்து தனி மாநிலம் அமைக்க பரிசீலிக்கப்பட்டுவதாக வெளியான தகவல்கள் குறித்து ஐ.ஜே.கே. கட்சியின் தலைவராகவும், பெரம்பலூர் மக்களவை தொகுதியின் எம்.பி.யாகவும் இருக்கின்ற பாரிவேந்தர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்வியில், தற்போதைய சூழலில் தமிழ்நாட்டை பிரிப்பதற்கான சூழல் இருந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையா? அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் கூறுகையில், தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை. தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் எந்த கோரிக்கையும் வரவில்லை என கூறியுள்ளார்.

முன்னதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் சுய விவரகுறிப்பில் கொங்குநாடு என்ற வார்த்தை இடம்பெற்றதால் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த விளக்கம் மூலம் மாநில பிரிவினை பிரச்சனை குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.