தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் தேர்தலின்போது வாக்குப்பதிவுக்கான நேரத்தை நீட்டித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2016ம் ஆண்டுடன் நிறைவடைந்தது. அப்போது மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமலேயே இருந்தது. இதனால் மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பிய பல கோடி நிதி, உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் திரும்பி அனுப்பப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சென்னை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, கடந்த 2019ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
ஆனால் பின்னர் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் விடுபட்ட பகுதிகளுக்கு விரைவாகத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்தச்சூழலில் கொரோனா காரணமாக வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை 1 மணி 30 நிமிடங்கள் நீட்டித்து தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கமாக உள்ளாட்சித் தேர்தல் காலை 7 முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடைபெறும் நிலையில், தற்போது வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.