தமிழகத்தில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை வடபழஞ்சியில் பினக்கிள் இன்போடெக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் 1.80 லட்சம் சதுர அடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிறுவனத்தில் தற்போது 950 பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ள நிலையில், 2025-க்குள் 6 ஆயிரம் பேருக்கு வேலை வழங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பினக்கிள் போன்ற நிறுவனங்கள் தென் மாவட்டங்களில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் எதிர்காலம் என்பது டிஜிட்டல் காலம் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, நாட்டிலேயே முதல் முதலாக 1997-ம் ஆண்டு ஐ.டி. கொள்கையை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழகத்தில் ஐ.டி. புரட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி என்றும், தற்போது தமிழகத்தில் வீதிதோறும் பொறியியல் பட்டதாரிகள் இருப்பதற்கு கருணாநிதி தான் காரணம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.