தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதன் மூலம் நாளையே கலந்தாய்வு வைத்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், தமிழக அரசைப் பொறுத்தவரை தயார் நிலையில் இருக்கிறது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

2023-24 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்ற மாணவ மாணவியர்களின் தரவரிசைப் பட்டியலை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “2023-24 ஆம் ஆண்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இளநிலை மருத்துவம் 6326 இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த பல் மருத்துவம் 1768 இடங்களும் உள்ளன.

இந்தாண்டு 7.5% ஒதுக்கீட்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லுரிகளில் உள்ள மொத்த இளநிலை மருத்துவம் 473 இடங்களும், 7.5% ஒதுக்கீட்டுக்கான அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவக் கல்லுரிகளில் உள்ள மொத்த பல் மருத்துவம் 133 இடங்களும், ஆக மருத்துவ இடங்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 606 இடங்களும் உள்ளது. இந்த எண்ணிக்கையைப் பொறுத்தவரை 2020-2021 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களும் சேர்ந்து 7.5% இட ஒதுக்கீட்டின்படி 435, 2021-2022 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களும் சேர்ந்து 7.5% இட ஒதுக்கீட்டின்படி 555ம், இந்தாண்டு 2022-2023 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களும் சேர்ந்து 7.5% இட ஒதுக்கீட்டின்படி 584ம், ஆக இந்தாண்டு 606 இடங்களாக உயர்ந்து இருக்கிறது.

நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் (Management Quota) உள்ள மொத்த இளநிலை மருத்துவம் 1509 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளில் (Management Quota) உள்ள மொத்த பல் மருத்துவம் 395 இடங்களும், தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகள் 36, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஒன்றும், சுயநிதிக் கல்லூரிகள் 21, சுயாட்சிக் கல்லூரிகள் (Deemed Universities) 13 சேர்ந்து ஆக 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திலேயே இருக்கிறது. ஆக 71 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாணவ சேர்க்கை இளநிலை மருத்துவ இடங்கள் 11,475 ஆக இருக்கிறது. பல் மருத்துவ இடங்கள் 2150 ஆக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் கலந்தாய்வை பொறுத்தவரை ஏற்கெனவே ஒன்றிய அரசு வரும் 20ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று இன்னமும் அதிகாரப் பூர்வமான அறிவிப்பு இல்லாமல் இருக்கிறது. ஏற்கெனவே 17ம் தேதி தொடங்கப்படும் என்று அதிகாரப் பூர்வமான அறிவிப்பு இல்லாமல் தெரிவித்தார்கள். ஒன்றிய அரசும் அந்தந்த மாநில அரசுகளும் ஒரே நேரத்தில் கலந்தாய்வு மேற்கொள்ளலாம் என்று சொன்னார்கள். இப்போது நமது துறையின் சார்பில் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மற்றும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக தேர்வுக் குழு தலைவர் ஆகியோர் இதில் இருக்கிற சிக்கல்களை சம்மந்தப்பட்ட ஒன்றிய அலுவலர்களுக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் இந்த கலந்தாய்வு நடைபெறுமேயானால் மாணவர்கள் ஒன்றிய அரசிலும், மாநில அரசிலும் பிளாக் செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே இது காலவிரயம் ஆகும் எனவே ஒன்றிய அரசு நடத்தியதற்கு பிறகு 5, 6 நாட்கள் இடைவெளியில் மாநில அரசுகள் இந்த கலந்தாய்வை மேற்கொண்டால் சரியாக இருக்கும் என்கின்ற கருத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவர்களும் ஒப்புதல் தந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் 20ஆம் தேதி என்று கலந்தாய்வை மேற்கொள்ள இருப்பதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. அது ஆதாரப் பூர்வமான செய்தி அல்ல என்றாலும், நாம் இன்றைக்கே தயாராக இருக்கிறோம். பட்டியல் வெளியிடப்பட்டதன் மூலம் நாளையே கலந்தாய்வு வைத்துக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அறிவித்தாலும், தமிழக அரசைப் பொறுத்தவரை நாம் தயார் நிலையில் இருக்கிறோம்.

மேலும், ஒன்றிய அரசு வரும் 20ம் தேதி கலந்தாய்வு நடத்துமேயானால், தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்பதை உங்களின் வாயிலாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.