
தமிழகத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணு ஆய்வகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் நாளை தொடங்கி வைக்கிறார் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியாதவது: தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஒரே நாளில் 6 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 40 ஆயிரம் மையங்களில் 20 லட்சம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 கோடியே 74 லட்சத்து 89 ஆயிரத்து 89 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக உயரும்.
அண்டை மாநிலமான கேரளாவில் டெல்டா பிளஸ் வைரசை கண்டறியும் ஆய்வகங்கள் பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தான் உள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து அனுப்பப்படும் மாதிரிகளை சோதனை செய்து முடிவுகள் பெறுவதில் காலதாமதமும், அதிக செலவும் ஏற்படுகிறது. இதனை தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசை கண்டறியும் ஆய்வகம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதன்படி இந்தியாவில் தமிழகத்தில் மாநில அரசே ரூ.4 கோடி செலவில் ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கருவிகளும் வாங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மரபணு ஆய்வகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்கான வல்லுநர்கள் பெங்களூரு சென்று அங்குள்ள ஆய்வகத்தில் பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் டெல்டா வைரஸ் மரபியல் அணு பரிசோதனை விரைவாக நடத்த ஏதுவாக அமைந்துள்ளது. தமிழகத்தை டெல்டா வைரசால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். நிபா மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை.
நீட் தேர்வு குறித்து மாணவ, மாணவிகள் மன உளைச்சலோ, அச்சமோ கொள்ள வேண்டாம். முதல்வர் ஸ்டாலின் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளார். இது குறித்து ஒன்றிய அரசிடமும் வலியுறுத்தி அறிஞர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை சட்டரீதியாக எதிர்க்க அரசு தயாராக உள்ளது.
மாணவர்களின் நலன் காக்க அரசு கண்டிப்பாக தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கைப் பெற்றுத் தரும். கிராமப்புற மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடரும். திமுக அரசு மாணவர்களின் நலன் காக்கும் அரசாகவே விளங்கி வருகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்ப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் எவ்வித உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. சுற்றுச்சுவர் மட்டுமே உள்ளது. ஆகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.