சென்னை: தமிழகத்தில் புதிய துறையாக இயற்கை வளத்துறை உருவாக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தொழில்துறையில் இருந்து சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் பிரிவை பிரிக்க முடிவு செய்யப்பட்டு அது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் கீழ் இந்த துறையானது செயல்பட்டுவருகிறது.
இந்த துறைக்கு வலுசேர்க்கும் வகையில் 3 பிரிவுகள் இந்த துறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் ஏற்கனவே உள்ள அமைச்சரவையில் நிர்வாக வசதிக்காக மூன்று துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் புதிதாக இயற்கை வளத்துறை என்ற ஒரு துறையை உருவாக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனரகம், தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னாடைஸ் நிறுவனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, அது இயற்க்கை வளத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது. இந்த துறைக்கு தேவையான விதிகள் மற்றும் அறிவுரைகள் மனித வளத்துறையிடம் இருந்து வழங்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.