தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வருகை புரிந்தனர்

தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதன் காரணமாக மார்ச்சில் பள்ளிகளுக்கும், பின்னர் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு மாதமாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் இன்று(செப்.,1) திறக்கப்பட்டன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும், முதல்கட்டமாக நேரடி வகுப்புகள் துவங்கின.அதேபோல், கல்லூரிகளும் திறக்கப்பட்டன. முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்றவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதை முன்னிட்டு, மாணவர்கள் உற்சாகமாக வந்தனர்.

பள்ளி, கல்லூரி வளாகங்கள் முழுக்க கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டன. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். மாணவர்களின் வசதிக்காக அரசு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. சீருடையுடன் வரும் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.