தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நாளை (ஜன.9) தொடங்க உள்ள நிலையில், இதற்கான பணிகள் குறித்து 3 அமைச்சர்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. பரிசு தொகுப்பு வழங்கப்படும் தேதி, நேரத்தை குறிப்பிட்டு தெரு வாரியாக, வீடு வீடாக நியாயவிலை கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கினர்.
இந்நிலையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை முதல் 12-ம் தேதி வரை 4 நாட்கள் நியாயவிலை கடைகளில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். 12-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள், வெளியூரில் வசிப்பவர்கள், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதி வழங்கப்படும்.
இந்நிலையில் இதற்கான பணிகள் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் மற்றும் உணவுத்துறை அமைச்சர் எஸ்.சக்கரபாணி ஆகியோர் தலைமையில், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் கரும்பு கொள்முதல், டோக்கன் விநியோகம், நியாயவிலை கடைகளுக்கு பொருட்களை அனுப்புதல் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாளை சட்டசபை கூடவுள்ள நிலையில் மாவட்ட தலைநகரில் இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள் தொடங்கி வைக்கவுள்ளனர்.