தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி – தமிழக அரசு

தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தில் மாவட்ட வாரியாக நோய் தொற்றும் தன்மை அண்டை மாநிலங்களில் நோய்த்தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளில் செயலாக்கம் குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கடந்த முறை எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போதுள்ள நோய்த்தொற்று நிலையின் அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் மாநிலத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனடிப்படையில், நடைமுறையில் உள்ள நோய் பரவல் தடுப்பிற்கு கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 6ம் தேதி காலை 6 மணி வரை என மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி செப் 1ம் தேதி முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படும். பள்ளிகளில் மதிய உணவு திட்டம் உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

அனைத்து கல்லூரிகளிலும் செப் 1 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவர்.

அனைத்து பட்டயபடிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்படும். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும்.

நிலையான நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் நாளை மறுநாள் முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். திரையரங்க பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருப்பதை அரங்க உரிமையாளர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும்.

கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். அப்பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி அல்லது மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி வரை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பம் அல்லது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

அங்கன்வாடி மையங்கள் செப் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களில் பொறுப்பாளர்கள் பணியாளர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும்.

நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக் கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூட கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன் பொதுமக்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை பெறவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.