தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நோய்த் தொற்று பரவலின் தாக்கம் மற்றும் அண்டை மாநிலங்களில் ஏற்பட்டுவரும் நோய்த்தொற்றின் உயர்வு, நோய்த்தொற்று அதிகரித்தால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்று முடிந்த ஆலோசனைக் கூட்டத்தின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகள் வருகிற செப்.15ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஞாயிற்றுக்கிழமைகளில் (செப்.5 முதல்) அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, அறிவித்தவாறு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுதலங்களிலும் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் திருவிழாக்கள் நடத்துவதற்கான தடையும் நீட்டிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அந்தந்தந்த மாவட்டங்களில் நிலவும் நோய்ப் பரவலின் அடிப்படையில் தகுந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்.
மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஏற்கெனவே நாளை மறுநாள் முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து அரசுத் துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு விடுதிகள், தனியார் கல்வி நிறுவனங்களின் விடுதிகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல, பணிபுரிபவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள் கொரோனா நோய்த்தொற்று தடுப்பிற்கான நிலையான வழிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேற்படி விடுதிகளில் பணியாற்றும் விடுதி காப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்வி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ளவேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் 2021-22 கல்வியாண்டில், மாணவர்/மாணவியர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக் கழகங்களால் வழங்கப்படும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவ மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து அவர்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் பள்ளி வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ / மாணவியர்கள் தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம் காண்பித்து அவர்தம் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிறுவனம் வரை சென்றுவர கட்டணமின்றி பயணிக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.