தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதன்படி, பள்ளிகள் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
இந்நிலையில் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா சிகிச்சை மைய கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும். கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம். கல்லூரிகளில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஆகியவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி போட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி போடாதவர்களுக்கு சுகாதாரத் துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு கல்லூரிகளிலேயே தடுப்பூசி போட வேண்டும்.
நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் பரிசோதனை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டிய அவசியமில்லை.
கல்லூரியில் பயன்படாத பிளாஸ்டிக் கப்புகள், தேனீர் கப்புகள், டயர்கள் மற்றும் விஷ ஜந்துக்கள் தஞ்சம் அடையும் இடங்களை அப்புறப்படுத்த வேண்டும். சுத்தமான குடிநீர் வசதியை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.