
தமிழகத்தில் கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், பாஸ்கரின் நேரடி மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பல குழுக்களாக பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த டீசல் ஏற்றி வந்த 5 டேங்கர் லாரிகள் மற்றும் 3 டாடா ஏஸ் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் கடந்த 13ம் தேதி சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின்போது அதிகாலை 3 மணியளவில் கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து லாரி டிரைவர் ராஜு மகன் மதியழகன்(47), கிளீனர் அமுத்திரம் மகன் செல்வம்(26), உரிமையாளர் திருப்பூரை சேர்ந்த இன்பராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ். குடோன் அருகில் கடந்த 12ம் தேதி வாகன சோதனையில் 4 ஆயிரம் லிட்டர் ஏற்றி வந்த லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்கள் சபாபதி மற்றும் செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேலம் கேது நாயக்கன்பட்டியில் கடந்த 5ம் தேதி வாகன தணிக்கையில் 1,350 லிட்டர் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு கடந்த 6ம் தேதி வாகன தணிக்கையில் 17,050 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த 3 லாரிகள் மற்றும் ஒரு டாடா ஏஸ் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கலப்பட டீசல் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும் பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரியின் ஒட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் கடந்த 1ம் தேதி 1,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். மேலும் சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் 350 லிட்டர் கலப்பட டீசல் டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.