தமிழகத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, “கடந்த ஒரு மாதத்திற்கு முன்புவரை, தமிழகத்தில் உள்ள 4 பன்னாட்டு விமான நிலையங்களிலும் இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருவர் என்கிற அளவில்தான் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை 10 முதல் 20 என்கிற அளவில் உயர்ந்திருக்கிறது. எனவே, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் 4000 பரிசோதனைகளின் எண்ணிக்கையை விரைவில் 11,000 பரிசோதனைகள் வரை உயர்த்துவதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆக்சிஜனைப் பொருத்தவரை, 24,061 ஆக்சிஜன் கான்சென்டேட்டர்களும், 260 பிஎஸ்ஏ பிளாண்ட்களும், 2,067 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் சேமிப்புத் திறன் கொண்ட அமைப்பும் தயார் நிலையில் உள்ளது. ஆக்சிஜன், படுக்கை வசதிகள், மருந்து கையிருப்புகள் நூறு சதவீதம் முழுமையாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.