தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாகவும், வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுபெற்று இருப்பதாலும் அடுத்து வரும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோவை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி , மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் அளவிற்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்பதால், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்றும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.