தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலை அக்டோபர் மாதம் உச்சம் அடையும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கொரோனாவின் 3வது அலை தமிழகத்தில் உருவாகி விடக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு தற்போது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வருகிற 9ம் தேதியுடன் ஊரடங்கு நீட்டிப்பு முடிவுக்கு வர உள்ளதால் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அடுத்த இரண்டு (ஆக.23 வரை) வாரங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக நோய் தொற்று பரவ கட்டுப்படுத்தும் நோக்குடன் அதிக அளவில் பொது மக்கள் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் அனைத்து தரப்பு கருத்துக்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்கள் உடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிடும்.

இறைச்சி மற்றும் மீன் சந்தைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி அறைகளாக பிரித்து விற்பனை செய்வதை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும்.

அனுமதிக்கப்பட்டுள்ள மற்றும் கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிப்பான் கட்டாயமாக வைக்கப்படுவதால், உடல் வெப்பநிலை பரிசோதனைக் கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் கவசம் அணிவது சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து கடைகளும் காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு கடைகளை சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான அவர்களை அனுமதிக்க கூடாது.

கடைகளில் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

மேற்படி விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டில் பகுதிகளில் மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர இதர செயல்பாடுகளுக்கு அனுமதி இல்லை. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய் தொற்றுகளை வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.