தமிழகத்திற்கு 4 மாதங்களுக்கான நதிநீரை காவிரியில் இருந்து திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13வது கூட்டம் காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் பொதுப் பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளின் நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிக்கக் கூடாது என தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து நிலுவையில் உள்ள நீரை வழங்குவது உள்ளிட்ட நீர் பங்கீட்டு விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் விவாதத்தினர். அப்போது, தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது.
அதற்கு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர் ஏற்கனவே காவிரியில் திறந்து விட்டுள்ளோம் என கர்நாடகா அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தென்மேற்கு பருவமழை காரணமாக அணைகள் நிரம்பிவிடக்கூடாது என்பதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது என தமிழக அரசு சார்பில் முறையிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கூட்டத்தின் முடிவில், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான 30.6 டிஎம்சி நீரை காவிரியில் இருந்து திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவிட்டு, செப்டம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய நீரையும் உடனே திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.