தமிழகத்திற்கு இன்னும் 9 கோடி தடுப்பூசிகள் தேவை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமங்களாக மாறியுள்ளது கொடைக்கானல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 100 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் குடல் இறக்க நோய்க்கான அறுவை சிகிச்சை பிரிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் அரசு முகாம்களில் இதுவரை 2 கோடியே 56 லட்சத்து 47 ஆயிரத்து 875 பேருக்கு  தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் போடப்பட்டுள்ளதை சேர்த்தால் இதுவரை 2 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரத்து 400 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் 3 கோடியை நெருங்க உள்ளோம். மொத்தம் 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அந்த வகையில் 12 கோடி தடுப்பூசி தேவை 3 கோடி போட்டாலும் மேலும் 9 கோடி தடுப்பூசி தேவை. எனவே அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

கொடைக்கானல், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 100 சதவீதம் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய கிராமங்களாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 1 =