தமிழகத்தின் முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை என்.சங்கரய்யாவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தின் முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை என்.சங்கரய்யாவுக்கு முதல்வர் முக.ஸ்டாலின் இன்று நேரில் சென்று வழங்கினார்.

தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப் படுத்தும் வகையில், ‘தகைசால் தமிழர்’ என்ற பெயரில் புதிய விருதை தமிழக அரசு உருவாக்கியது. இதற்காக அமைக்கப்பட்ட குழு கூட்டத்தில், சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அந்த விருதை வழங்க முடிவு செய்யப்பட்டது. ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யாவுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதழையும் முதல்வர் முக.ஸ்டாலின் நாளை சுதந்திர தினத்தன்று வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் என்.சங்கரய்யாவின் உடல்நிலையை கருதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கே நேரில் சென்று முதல்வர் முக.ஸ்டாலின் தமிழகத்தின் முதல் ‘தகைசால் தமிழர்’ விருதை இன்று வழங்கினார்.

மேலும் விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். ஆனால் விருதுடன் அளித்த ரூ.10 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு என்.சங்கரய்யா வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமை என்.சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.