தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் என்பது ‘நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை’ – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருத்து

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் விவரம்: ”தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை.

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற ‘வேறு வகை’ திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள். ஒரு புதிய சமூக நிறுவனத்தை உருவாக்குவதற்கு உரிமை உண்டு என்பதாகவோ அல்லது அது தனி நபர் விருப்பம் என்பதாகவோ உரிமை கோர முடியாது. இது அடிப்படை உரிமையாகாது. தனி நபரின் விருப்ப உரிமையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பதற்கான உரிமை இல்லை.

நகர்ப்புற மேல்தட்டு பார்வையுடன் கூடிய மனுக்கள் தாக்கல் செய்யப்படும்போது, அந்த மனுக்களின் அடிப்படையில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். கிராமப்புற மக்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்களின் கருத்துகள், அவர்களின் குரல்கள், மதப் பிரிவுகள், தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மற்ற திருமண முறைகள் மீது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் ஏற்படுத்தும் விளைவுகள் என விரிந்த பார்வையில் இதனைப் பார்க்க வேண்டும்.

தற்போது திருமணம் என்பது சட்டத்தின்படியும், மதத்தின்படியும் புனிதமான ஒன்றாக, பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக உள்ளது. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டால், அது ஒவ்வொரு குடிமகனின் நலன்களையும் தீவிரமாக பாதிக்கும். பாலியல் உறவுக்கான தேர்வு மற்றும் பிறரின் தலையீடு இல்லாமல் இருப்பதற்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் ஏற்கெனவே திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதை அதற்கான சட்டமன்றம் / நாடாளுமன்றம் மட்டுமே செய்யப்பட முடியும். நீதித்துறை தீர்ப்பால் அல்ல” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பின்புலம்: முன்னதாக, மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான திருமணத்தை அங்கீகரிப்பது, ஏற்றுக்கொள்ளப்பட்ட சமூக விழுமியங்களிலும் பல்வேறு மதங்களின் தனிச் சட்டங்களுக்கு இடையிலான சமநிலையிலும் பெரும் சேதத்தை விளைவித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அரசு கூறியிருந்தது. ஆனால், சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் செலுத்தக்கூடியதும், சட்டம்-அரசமைப்பு தொடர்பான முக்கியமான கேள்விகளை உள்ளடக்கியதுமான இந்த விவகாரத்தை அரசமைப்பு அமர்வின் விசாரணைக்கு உட்படுத்துவதே சரியானது என்கிற முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்திருந்தது. 2018-இல் நவ்தேஜ் சிங் ஜோஹர் வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘18 வயதைக் கடந்த தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு குற்றம் அல்ல’ என்று தீர்ப்பளித்தது. இதன் மூலம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது பாலின ஈர்ப்பை மறைத்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

ஆனால், பிற உரிமைகளைப் பெறுவதற்கு அவர்கள் நீண்ட போராட்டத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. திருமணம் செய்துகொண்டோ செய்துகொள்ளாமலோ இணைந்து வாழ்தல் என்பது காதல் உறவின் இயற்கையான நீட்சி. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் திருமணம் செய்துகொண்ட இணையர்களுக்குக் கூட்டு வங்கிக் கணக்கு தொடங்கிக்கொள்வது தொடங்கி குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்வது, சொத்தில் பங்கு கோருவது வரையிலான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தன்பாலின இணையர்களுக்கிடையிலான திருமணம் சட்டப்படி செல்லாது என்பதால் அவர்களுக்கு இந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பெரும்பாலான தனிச் சட்டங்கள் மதங்கள், சாதிகளைக் கடந்த திருமணங்களையும் அங்கீகரிப்பதில்லை. அதுபோன்ற திருமணங்கள் சிறப்புத் திருமணச் சட்டம் 1954இன் கீழ் பதிவுசெய்யப்படுகின்றன. தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களையும் அதன் கீழ் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட விழுமியங்கள் மீறப்படும்போது சமூக அமைதி சீர்குலையும் என்கிற மத்திய அரசின் கவலையைப் புறந்தள்ளிவிட முடியாது.

அதே நேரம் சாதி, மதம், இனம், பாலினம் ஆகியவை சார்ந்த பாகுபாடுகளைக் களைவதைப் போலவே பாலின ஈர்ப்பு, பாலியல் தெரிவு ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைய வேண்டியதும் அரசின் கடமைதான். இதை உணர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிப்பது தொடர்பான தனது முடிவை மத்திய அரசு மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்த சமூகத்தின் மனநிலையும் மாற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தது நினைவுகூரத்தக்கது.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 70 = 78

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: