புதுக்கோட்டை மாவட்ட ஹெ.ஐ.வி உள்ளோர் சங்கம் மற்றும் மரம் நண்பர்கள், துணைவன் அமைப்பு, புதுக்கோட்டை, கல்வாரி சேப்பல் டிரஸ்ட், பெங்களுரு, இணைந்து நடத்திய பொங்கல் விழாவும் உலக எய்ட்ஸ் அனுசரிப்பு தினம் நிகழ்வும் இன்று ஆயுதப்படை மகாலில் நடைபெற்றது.
நிகழ்விற்கு மருத்துவர் தனசேகரன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஹெ.ஐ.வி.தொற்றாளர் குடும்பங்களுக்கு பொங்கல் பை மற்றும் குழந்தைகளுக்கு உடைகளும் வழங்கி சிறப்புரையாற்றினார். “ஹெச்.ஐ.வி. தொற்றாளர்கள் முதலில் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். நோய் வந்து விட்டதே என்று அச்சப்படாமல் உரிய சிகிச்சையைப் பெற்று நலமுடன் உற்சாகமாக வாழப் பழகிக்கொள்ளுங்கள் ” என்று தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
மேலும் ராஜா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ராஜாமுகமது, மரம் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சா.விஸ்வநாதன், பழனியப்பா கண்ணன்,கார்த்திக் மெஸ் மூர்த்தி, மக்கள் இசைக்கலைஞர்கள் செந்தில், ராஜலட்சுமி, சங்க மாஸ் அமைப்பைச் சேர்ந்த முருகேசன், திருமயம் பெல் மேலாளர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு பொதுநல அமைப்புகளின் உதவியில் 250 குடும்பங்களுக்கு பொங்கலிடத்தேவையான பொருள்களோடு பொங்கல் பையும், 70 குழந்தைகளுக்கு உடையும் வழங்கப்பட்டது. முன்னதாக புதுக்கோட்டை மாவட்ட ஹெச்.ஐ.வி. உள்ளோர் சங்கத் தலைவர் ராமசாமி வரவேற்புரையாற்றினார். நிறைவாக செயலாளர் அழகேசன் நன்றி கூறினார்.