தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி இடங்கள் குறைப்பு பெற்றோர்கள் அவதி அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயிலும் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான இடங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளின் எல்கேஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 25சதவிதம் இடங்கள் வாய்ப்பு மறுக்கப் பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு  தொடர்ந்து வழங்கபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இக்கல்வி ஆண்டிற்கான சேர்க்கைக்கு ஏப்ரல் 20ம் தேதியான இன்று முதல்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பெற்றோர்கள் ஆர்வமுடன் விண்ணப்பிக்க தயாராக இருந்தனர்.

இந்நிலையில் கடந்த கல்வி ஆண்டுகளைப் போல மாணவர் எண்ணிக்கைக்கு இடம் அளிக்காமல் மிக குறைந்த அளவு இடங்களே அரசின் சார்பில் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே பள்ளிக்கு ஓரு பிரிவுக்கு 8 மாணவர்கள் என்ற நடைமுறை இக்கல்வி ஆண்டு மாற்றப்பட்டு உள்ளது. தற்போது கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில்  25சதவிதம் என மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த  கணக்கீடு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை பாதுகாப்பதாக இல்லை கொரோனா காலத்திற்கு பிறகு தற்போது தான் மாணவர்கள் கல்வி பயில வருகிறார்கள். சமுதாயத்தில் பின்தங்கிய பெற்றோர்களின் குழந்தைகளின் கல்வி கனவு இவ்வகை கணக்கீடு மூலம் சிதைந்துள்ளதாக சமூக ஆர்வளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த  கணக்கீட்டு முறையை மாற்றி கடந்த கல்வி ஆண்டுகளைப் போலவே  இம்முறையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கையும் வைக்கின்றனர். இக்கோரிக்கை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் எடுத்துரைக்க தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் தனியார் பள்ளிகளின் தாளாளர்கள் அனைவரும் அதன் தலைவர் அசரப் அன்சாரி  மனு அளித்தனர். மனுகுறித்து விரைவில் தமிழக அரசு நல்ல முடிவை அறிவிக்கும் என தாளாளர்கள் மற்றும் பெற்றோர்கள் காத்திருக்கின்றனர்.

தங்கள் பகுதி குடியிருப்புகள் அருகாமையில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகளில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் அரசு விதிகளுக்கு உட்பட்டு தங்கள் பிள்ளைகளை இலவச கல்வி திட்டத்தில் சேர்த்துக் கொள்ள மனு அளித்து காத்திருக்கும் சூழலில் பள்ளிகளுக்கான இட ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.