தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி முதமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா (செப்.17-ந் தேதி), பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப்.15-ந் தேதி), திமுக உதயமான ஆண்டு (செப்.17-ந் தேதி) ஆகிய விழாக்களை திமுக முப்பெரும் விழாவாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு கருணாநிதி நூற்றாண்டு விழா, கட்சி பவள விழா ஆண்டில் திமுக காலடி எடுத்து வைத்துள்ளது. எனவே இந்த ஆண்டு திமுக முப்பெரும் விழா சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே, திமுக முப்பெரும் விழா வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டாவில் இன்று நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் முப்பெரும் விழா தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து ரெயில் மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடி சென்றடைந்தார்.

இந்நிலையில், தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். வேலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.

பின்னர், வேலூர் மேல்மொனவூரில் நடந்த நிகழ்ச்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை பயனாளர்களுக்கு வழங்கினார். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் புதிதாக கட்டப்பட்ட 1,591 குடியிருப்புகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.