தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும்,ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகனுமான எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா இன்று காலமானார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈ.வெ.ரா.இ.திருமகன். 45 வயதாகும் இவர் தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில தினங்களாக இவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று மதியம் அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஈரோட்டில் கச்சேரி சாலையில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். திருமகன் மரணம் செய்தியை கேட்டதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது வீட்டுக்கு காங்கிரசார் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். ஈரோட்டில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்த சிறப்பு திருமகனுக்கு உண்டு. தந்தை பெரியாரின் கொள்ளு பேரனான இவர் முதல் முதலாக சட்டசபைக்கு சென்றதால் ஈரோடு காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்காத அளவுக்கு திருமகன் மரணம் அடைந்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் சுமார் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவருக்கு அந்த தொகுதியில் அனைத்து தரப்பினரும் வாக்களித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 2014ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தார். 2016-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்தார். 2021-ம் ஆண்டு முதல் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.
