தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து ஜல்லி எளிமையாக கிடைக்க செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு கோரிக்கை

தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அகில இந்திய கட்டுனர் சங்கம் தஞ்சை மைய கட்டடத்தில் தமிழ் மாநில நெடுஞ்சாலை குழு மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் குழு சார்பில் தலைவர் எம்.அய்யப்பன் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் அகில இந்திய கட்டுனர் சங்க தமிழ் மாநில நெடுஞ்சாலை குழுத்தலைவர் எம்.அய்யப்பன் கூறியதாவது:- தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கல்குவாரிகள் கிடையாது. அதனால் வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரும்போது கனிம வளத்துறை மற்றும் வருவாய்த்துறை மூலமாக ஒப்பந்ததாரர்களுக்கு இடர்பாடுகள் உள்ளன. இதை தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து ஒப்பந்தக்காரர்கள் கட்டுமான பொருட்கள் எளிமையாக கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

புதிய ஒப்பந்தக்காரர்கள் பதிவு நீண்ட நாட்களுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒப்பந்தக்காரர் புதுப்பித்தல் நடைமுறை சென்னையில் மட்டும் இருந்ததை மாற்றி புதிதாக அந்தந்த மண்டல பொறியாளர்கள் அளவிலேயே புதுப்பிக்கும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன் தகுதி ஒப்பந்தப்புள்ளிகள் நிதி உச்சவரம்பு ரூ.2 கோடியிலிருந்து 5 கோடியாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை ஒப்பந்தக்காரர்கள் கோரிக்கையை ஏற்று ஆட்சி ஏற்ற 100 நாட்களுக்குள் கட்டுமானத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறது.

நெடுஞ்சாலைத்துறையில் உட்கோட்ட அளவில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி அந்தந்த மாவட்ட ஒப்பந்தக்காரர்கள் வேலை செய்வதற்கான வழிமுறையை ஏற்பாடு செய்து கொடுத்தது. நெடுஞ்சாலைத்துறையில் தொகுப்பு முறையிலான ஒப்பந்தப்புள்ளி வழிமுறையை ரத்து செய்தது போன்றவற்றிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கும் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறோம் எனக்கூறினார்.

இதில் மாநில பொதுப்பணித்துறை குழுத்தலைவர் ஆல்பர்ட், சுரேஷ், சோமசுந்தர பாரதி, அகில இந்திய கட்டுனர் சங்கம் தேசிய காப்பாளர் காடாம்பட்டி இராஜகோபால், அகில இந்திய கட்டுனர் சங்கம் தஞ்சாவூர் மைய தலைவர் சி.மேகன், செயலாளர் ரெங்கப்பா, பொருளாளர் குருமூர்த்தி, முன்னாள் தலைவர்கள் ராஜசேகரன், இளஞ்சேரன், ஆனந்தன், ஜான் கென்னடி, கல்யாணசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.