தஞ்சை உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேதியியல் மாணாக்கர்கள் விசிட்

தஞ்சாவூரில் இயங்கிவரும் உணவுத் தொழில்நுட்பம்,  தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பார்வையாளர் தினத்தை முன்னிட்டு, உணவுப் பொருட்கள், நெல் வகைகள் பதப்படுத்துதல் போன்றவைகளின் கண்காட்சி நடைபெற்றது.  இதில் புதுக்கோட்டை, ஜெ.ஜெ. கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறை மாணாக்கர்கள், துறை தலைவர் முனைவர் சி.முத்துக்குமார் தலைமையில் கலந்து கொண்டு, தனது துறை சார்ந்த அறிவைப் பெற்றனர்.

இதில் நெல் வகைகளான மாப்பிள்ளை சம்பா,  குதிரைவாலி, திணை,  கருப்பு கவுனி,  கைக்குத்தல்,  காட்டுப்  பாணம்,மூங்கில் அரிசி,  கிச்சலி சம்பா, தூயமல்லி, சீரக சம்பா,  கருடன் சம்பா மற்றும் குடவாழை சிகப்பு அரிசி போன்றவை இடம்பெற்றிருந்தன.  இவைகளை சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது நம் உடலில் தோன்றும் ஆரோக்கிய மேம்பாடு குறித்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. சிறு தானியங்களான வரகு,  சாமை, திணை,  குதிரைவாலி, கம்பு,  கேழ்வரகு மற்றும் சோளம் ஆகியவற்றில் காணப்படும் சத்துக்களும் அவற்றின் மூலம் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள்  லட்டு,  அதிரசம், முறுக்கு,  ஓலை பக்கோடா, கூழ்,  புட்டு மற்றும் பாயாசம் ஆகியவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அவைகள் தயாரிக்கப்படும் முறைகளும் விளக்கப்பட்டன.  பின்னர்  அந்த நிறுவனத்தில் செயல்படும் பகுதியான  அரிசியின் ரகங்களை கண்டறிந்து,  தூய்மைப்படுத்தும் பகுதியில் மானாகர்கள் அனுமதிக்கப்பட்டு,  விளக்கம் அளிக்கப்பட்டது.

அதன் பிறகு உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாக்க பதப்படுத்தும் பிரிவுகளுக்கு மாணாக்கர்கள் அனுமதிக்கப்பட்டனர்.  அதில் எவ்வாறு மிகக் குறைந்த அளவில் உடலுக்கு தீங்கு விளைவிக்காத,  ரசாயனங்களை சேர்த்து,  மிதமான வெப்பநிலையில் உணவுப்பொருட்களை பயன்படுத்தலாம் என்றும், அதில் நுண்ணுயிரிகள்  வளரா வண்ணம் பாதுகாக்கலாம் என்றும்,  விளக்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனத்தில் உள்ள தானியங்களை கொள்முதல் செய்தல்,  தரம் பிரித்தல், உணவுப் பொருட்களை தயார் செய்தல், விற்பனைக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு பெருவுகளில் மாணாக்கர்கள் அனுமதிக்கப்பட்டு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.  இந்த பார்வையாளர்  தினமானது வேதியல் துறை மாணாக்கர்களுக்கு  மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது.  இதற்கான ஏற்பாடுகளை துறையின் உதவி பேராசிரியர்கள் செல்வி,உலகு,  சந்தியா, பிரியா ஆகியோர்  செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

37 − = 32