பாரத் கல்விக் குழுமத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வரும் பாரத் மகளிர் மன்றத்தின் சார்பில் மகளிர் தின விழா கடந்த 8-ஆம் தேதி பாரத் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. பாரத் மகளிர் மன்றத்தின் நிறுவனர் புனிதாகணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், “வளர்ச்சியை நோக்கி பயணிப்பது இன்றய பெண்களின் இலட்சியமாக உள்ளது. அவ்வாறு செல்கையில் ஓர் இடத்தில் நிலைத்து நின்றுவிட்டால் நம் வளர்ச்சி தடைப்படும். பெண்ணிற்கு ஆதரவாக பெண்ணேநின்றால் அவள் பலதடைகளையும் தாண்டி விருட்சமாக வளர்வாள். அனைவருக்கும் நிழல்கொடுத்து பயன்படுவாள் என்பது தான் உண்மை. கற்றலை விரும்பும் பெண்கள், தொடக்கக் கல்வி முதல் வாழ்வியல் கல்வி வரை கற்று எதிர்கால சந்ததிகளை சிறக்கச் செய்கிறார்கள்” என்று மாணவிகளிடையே சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து பாரத் கல்லூரியின் இயக்குநர் பாரத் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். முன்னதாக பாரத் மகளிர் மன்றத்தின் தலைவர் சங்கீதா வரவேற்புரை வழங்க, செயலாளர் மெர்சி ஆண்டறிக்கை வாசித்தார், துணைத் தலைவர் ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர், சுபா நன்றியுரை வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு விழா நடைபெற்றது.