தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரம்: பா.ஜ.க.,வை வி.சி.க., தடுத்ததால் மறியல், பரபரப்பு

தஞ்சாவூரில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பா.ஜ.க.,வினரை தடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.,வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆதிதமிழர் பாதுகாப்பு பேரவை மற்றும் அம்பேத்கர் கல்வி அறக்கட்டளை அலுவலக முகப்பில் 7 அடி உயர அம்பேத்கர் சிலை உள்ளது. அம்பேத்கரின் 66வது நினைவு நாளையொட்டி இன்று (டிச.6) காலை விடுதலை சிறுத்தைகள், தமிழ் தேசிய முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், பா.ஜ.க.,வின் மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் தலைமையில் பா.ஜ.க.,வினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர். அப்போது அங்கிருந்த வி.சி.க., மாவட்டச் செயலாளர் ரவி தலைமையிலான தலித் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பா.ஜ.க.,வினர் இந்த சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அம்பேத்கர் சிலையை சுற்றிலும் வி.சி.க.,வினர் நின்று கொண்டு மாலை போட விடாமல் தடுத்து, பா.ஜ.,வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

தகவலறிந்ததும் தஞ்சாவூர் நகர டி.எஸ்.பி., ராஜா மற்றும் போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்காமல் செல்லமாட்டோம் எனக் கூறி பா.ஜ.,வினரும் அம்பேத்கர் சிலை அருகே நாஞ்சிக்கோட்டை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 4 =