தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தகோரி விடிய விடிய பொதுமக்கள் போராட்டம் நாளை மறுநாள் உறுதியாக நடைபெறும் என புதுக்கோட்டை அதிகாரி உறுதி

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கிராமத்தில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக திடீரென ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் ஜனவரி 8ம் தேதி அந்த கிராமத்தில் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக மிக விமர்சையாக நடைபெற உள்ளதாக விழா கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கு முன்னரே பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி, நள்ளிரவில் போட்டி நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த விழா குழுவினர் மற்றும் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் நேற்று இரவு 9 மணியிலிருந்து இன்று அதிகாலை 3 மணி வரையில் மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர், ஏதும் அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க 200க்கும் மேற்பட்ட போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மீண்டும் அந்த கிராம மக்களோடு இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, அந்த கிராமத்தில் உள்ள தூய அடைக்கல அன்னை ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சம்பத்,கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களோடு கலந்தாலோசனையில் ஈடுபட்டனர்.

அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி அதிகாரிகள் கூறும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்து கொடுப்பதாக விழா குழுவினர் தெரிவித்ததன் அடிப்படையில் அவர்கள் கோரிக்கை விடுத்த தேதியான நாளை  8 ஆம் தேதி தச்சங்குறிச்சி கிராமத்தில் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெறும் என கோட்டாட்சியர் முருகேசன் அறிவித்தார். இதனையடுத்து நாளை மறுநாள் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை தச்சங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விழா குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் ஏற்கனவே ஆண்டின் முதல் தேதியான ஜனவரி 1ம் தேதி நடக்க இருந்த போட்டி ஜனவரி 6ம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆனால் இருமுறையும் தேதி மாற்றம் செய்தது ஒருபுறம் தங்களுக்கு வருத்தத்தை அளித்தாலும் மாவட்ட நிர்வாகம் தங்கள் தரப்பு விளக்கத்தையும் தங்களிடம் கூறி மீண்டும் நாளை மறுநாள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்திருப்பது மகிழ்ச்சி அளித்துள்ளதாகவும் தமிழகத்திலேயே இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு தங்கள் கிராமத்தில் நடப்பது தங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிப்பதாகவும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தங்கள் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனக்கும் சட்டங்கள் தெரியும் : விஜயபாஸ்கர் எச்சரிக்கை

மாவட்ட நிர்வாகத்தின் மீது எனக்கு ஆதங்கமும் கோபமும் உள்ளது. மக்களுக்காகதான் சட்டமே தவிர, அரசிற்காக சட்டங்கள் இல்லை. தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, முறையான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர். அப்படி இருந்தும் மாவட்ட நிர்வாகம் போட்டி நடத்த அனுமதிக்காதது மிகுந்த வருத்தம் அடைய செய்துள்ளது. எனக்கும் சட்டங்கள் தெரியும். விதிமுறைகள் தெரியும். மக்களின் உணர்வுகளும் தெரியும். அதற்காக தான் கடந்த அதிமுக ஆட்சியில் தொடர்ந்து இங்கு ஜல்லிக்கட்டு நடத்தினோம். இன்னும் மூன்று தினங்களுக்குள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வழிவகை செய்வதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார். இங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். நானே முன்நின்று போராட்டத்தை நடத்துவேன். அந்த நிலைக்கு மாவட்ட நிர்வாகம் என்னை தள்ளி விட வேண்டாம்.

செயலிழந்து போன புதுகை நிர்வாகம்

சாமானியர் தொடங்கி செல்வந்தர் வரையிலும் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் பலமுறை அரசு அலுவலகத்தின் வாசர்படியை ஏறி இறங்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலை தற்போது புதுக்கோட்டையில் நிலவி வருகிறது. ஆளுமை இல்லாத உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளால் கீழ் மட்டத்தில் இருக்கும் அலுவலர்கள் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சரியான நேரத்திற்கு அலுவலர்கள் 60% பேர் பணிக்கு வருவதில்லை என்பதும் எஞ்சிய அலுவலக நேரத்திலும் செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பதுமாகவே பலர் உள்ளனர். சிலர் கேளிக்கை உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார், சில மணி நேரங்களுக்குள் முடிய வேண்டிய பணிகள் அலட்சிய அதிகாரிகளால் ஆண்டு கணக்கில் முடியாமல் கொடுத்த மனுக்கள் அப்படியே உள்ளதும் தச்சங்குறிச்சியில் திட்டமிட்டபடி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாமல் இருப்பதற்கும் சரியான அலுவல் பணி நடைபெறாமல் உள்ளதே முக்கிய காரணம் மாவட்டத்திற்கு இரண்டு அமைச்சர்கள் இருந்தும் அதிகாரிகளை வேலை வாங்க முடியாத ஒரு அவலம் தொடர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

49 − 43 =