தங்களின் வாழ்வாதாரம் மேம்பட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென மீனவர் மற்றும் மகளிர் அமைப்புகள் வலியுறுத்தல்

‘துாத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்’ என, மீனவர் அமைப்புகளும், மகளிர் அமைப்புகளும் வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து, துாத்துக்குடியில் செயல்பட்டு வரும், ‘துளசி சோஷியல் டிரஸ்ட்’ விடுத்த அறிக்கை: மூன்றரை ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை சில வதந்திகளால் மூடப்பட்டுள்ளது. எனவே, துாத்துக்குடி மக்கள், 50 ஆயிரம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். துாத்துக்குடி மக்கள் வாழ்வாதாரம் மேம்பட, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க, தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

பெல் சுதந்திரம் மகளிர் சுய உதவி குழு: ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாயிலாக, 15 ஆண்டுகளாக, 600க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்க பெற்று, 10 ஆயிரத்துக்கு அதிகமான பெண்களாகிய நாங்கள், எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கையில் உயர்வு பெற்றோம்.ஆனால், பல்வேறு அறிவியல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வதந்திகளை சில சமூக விரோதிகள், எங்கள் ஊரில் உள்ள மக்களிடையே பரப்பி, இந்நிறுவனத்தை மூட வைத்து விட்டனர்.இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வேலை இழந்துள்ளனர். எங்கள் வாழ்வாதாரம் மிகவும் கேள்விக் குறியாகி விட்டது. நிறுவனம் மீண்டும் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

துாத்துக்குடி மீனவ மக்கள் நலவாழ்வு இயக்கம்: சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை சீற்றங்களால், நாங்கள் பயன்படுத்தி வந்த மீன்பிடி வலைகள் சேதமடைந்து விட்டன. நிர்கதியாக நின்றோம். அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகம், மீன்பிடி வலை, ஐஸ் பாக்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்து தொழில் நடத்த உதவியது.கொரோனா காலத்தில், தேவையான உணவு பொருட்களை வழங்கி, எங்கள் கஷ்டத்தை அந்நிறுவனம் தான் போக்கியது.எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலை செய்து கைநிறைய சம்பாதித்து வந்தனர்.ஆலை மூடலால், மூன்று ஆண்டுகளாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆலை செயல்பட்டால் தான், இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெற முடியும்.இதுபோல, குறிஞ்சி பூ மகளிர் சுய உதவி குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளன. சென்னை வந்துள்ள குழுவினர், முதல்வர் தனிப்பிரிவு, அமைச்சர் அலுவலகம், பத்திரிகை அலுவலகங்களுக்கு சென்று, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மனு அளித்து வருகின்றனர்.