மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் நதியா, விஜயா, வேம்பு, ராதிகா ஆகிய நான்கு பெண்கள் சுகாதார பரப்புரையாளர்களாக வேலை பார்த்து வந்தனர். வீடுகள் தோறும் சுகாதார பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்வது டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து பேரூராட்சிக்கு தகவல் சொல்வது, வீடுகள்தோறும் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து எடுத்துச் சொல்வது போன்ற வேலைகள் இவர்களது பணிகளாகும்.
கடந்த 7 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த இவர்களது ஒப்பந்தம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்தது. இந்த நான்கு பேரையும் வேலையை விட்டு நீக்கி விட்டு திமுகவை சேர்ந்தவர்களுக்கு அந்த பணிகள் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து குத்தாலம் திமுக நகர செயலாளர் சம்சுதீன் சந்தித்து தங்களுக்கு மீண்டும் பணி கொடுக்கும்படி நதியா கேட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திமுக நகர செயலாளர் சம்சுதீன் பேசியதாக கூறி மனமுடைந்த நதியா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு உயிருக்கு போராடி அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.