டோக்கியோ: பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவுக்கு 5வது தங்கப் பதக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பில் 2020 தொடரில் இந்தியாவின் பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இந்தியாவுக்கு பாராலிம்பிக்கில் 5வது தங்கப் பதக்கம் கிடைத்திருக்கிறது.

SH6 பேட்மிண்டன் பிரிவில் ஹாங்காங்கின் சூ மேன் கை-யை எதிர்த்து விளையாடிய கிருஷ்ணா நாகர், முதல் செட்டை 21-17 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் சுதாரித்து விளையாடிய ஹாங்காங் விரர் இரண்டாவது செட்டை 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனையடுத்து தங்கப் பதக்கத்துக்கான மூன்றாவது செட் பரபரப்பாக நகர்ந்தது.

இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்று ஆடி வந்தனர். போட்டியின் மத்திய பகுதியில் கிருஷ்ணா நாகர், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தினார். இறுதி செட்டை 21-17 என்ற புள்ளிகளுடன் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றுள்ளது.