டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளின் பதக்க பட்டியலில் 7 பதக்கங்களை பெற்று இந்தியா 26வது இடத்தில் உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் போட்டியில் 7வது நாளான இன்று இரண்டு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்று இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர்.
அதன்படி, இன்று நடைபெற்ற மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் ராஜஸ்தானின் ஜெய்பூரை சேர்ந்த இந்திய வீராங்கனை அவனி லெகாரா(19) அதிரடியாக விளையாடி எஸ்எச் பிரிவில் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்து, இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஆண்களுக்கான எப்56 வட்டு எறிதலில் டெல்லியை சேர்ந்த இந்திய வீரர் யோகேஷ் கதூனியா(24) இன்று நடந்த இறுதிப்போட்டியில் 44.38 மீட்டர் எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் ஆண்களுக்கான எப்46 ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி மற்றும் வெண்கலம் என இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளது. அதன்படி, இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த தேவேந்திர ஜஜாரியா(40) 64.35 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கத்தையும், சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தையும் பெற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ஆண்களுக்கான எப்64 ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனை படைத்து அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்த இந்திய வீரர் சுமித் அன்டில்(23) தங்க பதக்கத்தை வென்றுள்ளார். அதன்படி, இதுவரை பாராலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் யாரும் எறியாத தூரமாக 68.55 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இந்தியாவிற்கு 2வது தங்கப் பதக்கத்தை பெற்று தந்துள்ளார்.
முன்னதாக பாராலிம்பிக் போட்டியின் 6வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை பெற்றிருந்தனர்.
இந்நிலையில் இந்தியாவிற்காக F52 வட்டு எறிதல் விளையாட்டில் வெண்கலம் வென்ற 41 வயதான இந்திய வீரர் வினோத் குமாரின் வெண்கல பதக்கம் பாராலிம்பிக் போட்டியின் தொழில்நுட்பக் குழுவினர் எடுத்த முடிவின் அடிப்படையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் வட்டு எறிதல் எப்52 பிரிவில் பங்கேற்க வினோத்குமார் தகுதியற்றவர் என தொழில்நுட்பக்குழு அறிவித்திருக்கிறது.
இதன்மூலம் இந்தியா பதக்க பட்டியலில் ஒரு வெண்கலம் குறைந்துள்ளதால், 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களை தன்வசம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.