டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் : டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், டேபிள் டென்னிஸ் மற்றும் உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 9 விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் ‘சி4’ பிரிவு (காலில் பாதிப்பு அடைந்தவர்கள்) அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள சீனாவின் ஜாங் மியாவுடன் மோதி, 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதன் மூலம் குஜராத்தை சேர்ந்த 34 வயதான பவினாபென் பட்டேல் பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

இதனைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பவினாபென் பட்டேல், உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான சீனாவின் ஜோவ் யிங்  உடன் மோதி, 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியடைந்தார். இதன் மூலம் பவினாபென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.

அதேபோல் பாராலிம்பிக் போட்டியில் டி47 உயரம் தாண்டுதல் பிரிவில் இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாராலிம்பிக் போட்டியில் நாட்டிற்கு 2 வெள்ளி பதக்கங்களை பெற்று தந்த இருவருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, ஜானதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.